நூல் விலை உயர்வு - முதல்வருக்கு எம்.எல்.ஏ கடிதம்
எம்.எல்.ஏ செல்வராஜ்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஜவுளிதொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு ஜவுளித்துறையினர் மற்றும் நெசவாளர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான 1 சதவீத சந்தை வரியை ரத்து செய்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் உலக புகழ்பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் தவறான பஞ்சு ஏற்றுமதி கொள்கையின் காரணமாக, திருப்பூரில் ஜவுளி பின்னலாடை தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பஞ்சு மற்றும் நூல் விலை கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு மாற்றமும் இன்றி சீராக நடந்து வந்தது. பஞ்சு விலை பேல் ரூ.55 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பேல் ரூ.65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயர்வின் காரணமாக ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தும் நூலின் விலையானது ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர்கள் எடுப்பதில் பின்னலாடை துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், உள்நாட்டு உற்பத்தியையும் 50 சதவீதம் குறைக்கபோவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பஞ்சு விலை மற்றும் நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், இடைத்தரகர்களின் பஞ்சு பதுக்கல்களை கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.