உளுந்து செடியில் மஞ்சள் நோய் தாக்குதல்
மஞ்சள் நோய் தாக்குதல்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர், கள்ளர்நத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்து செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது. இந்த பருவத்தில் உளுந்து செடிகளை மஞ்சள் நோய் தாக்கி வருகிறது. செடிகள் வெளுத்து இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மஞ்சள் நோயை கட்டுப்படுத்தவும், கடும் வெப்பம் காரணமாக பூக்கள், பிஞ்சுகள் உதிராமல் இருக்கவும் செடிகளுக்கு ஊட்டச்சத்து டானிக் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து மெலட்டூர் பகுதியை சேர்ந்த உளுந்து சாகுபடி விவசாயி கருப்பண்ணன் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை முன் பருவம் மற்றும் சித்திரை பட்டத்தில் மெலட்டூர், கள்ளர்நத்தம் பகுதியில் உளுந்து அதிகளவில் பயிர் செய்துள்ளோம். கோடை மழை இல்லாததால் கடும் வெப்பம் மற்றும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக உளுந்து செடிகள் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை முன் பருவத்தில் பயிரிடப்பட்ட உளுந்து செடிகள் நன்றாக வளர்ந்து பூ வைத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது.
இத்தகைய செடிகள் மஞ்சள் நோய் தாக்குதலால் வெள்ளை நிறமாக மாறி வருகிறது. எனவே மஞ்சள் நோயை கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகி றோம். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளித்தால் தான் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிடில் உளுந்து செடிகளை பூச்சிகள் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியாது. இந்த ஆண்டு உளுந்துக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம். குவிண்டல் ரூ.12 ஆயிரம் வரை விலை போகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.