சென்னிலைகுடியில் சமத்துவபுரத்தில் வீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சியர்
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் 2023-2024-ம் ஆண்டிற்கான திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைகுடி ஊராட்சியில் அமைக்கப்படவுள்ள சமத்துவபுரத்தில் ரூ.620.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 100 வீடுகள் கட்டப்படவுள்ளது.
இவற்றில் ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள் மற்றும் இதர பிரிவினருக்கு 10 வீடுகள் என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகள் கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவ வீரர்கள், துணை இராணுப்படையின் ஒய்வு பெற்ற உறுப்பினர்கள், திருநங்கைகள், எச்.ஐ.வி. / எய்ட்ஸ் / காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், குடும்பத்தில் மனநலம் குன்றிய நபரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும். கான்கிரீட் கூரையுடன் கூடிய வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் இதர அரசு திட்டங்களில் பயன் அடைந்தவர்கள் சமத்துவபுரத்தில் வீடு பெறுவதற்கு தகுதியற்றவராக கருதப்படுவர். எனவே, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சென்னிலைகுடி ஊராட்சியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை மக்கள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி சமத்துவபுரத்தில்,
வீடு பெறுவதற்கான விண்ணப்பத்தினை ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று மற்றும் வருமானசான்று ஆகிய ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று 15.07.2024 தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.