சீல் வச்சா , பிரியாணியை ரோட்டில் கொட்டுவேன்

ஓசூரில் தொழில் உரிமம் பெறாத பிரியாணி கடையைப் பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் போது பிரியாணி அண்டாவை ரோட்டில் கொட்டுவேன் என கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர் மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாத கடைகள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தொழில் உரிமம் பெற வேண்டும் என ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக நோட்டீஸ்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலமும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு மேல் இந்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் நேற்று முதல் ஓசூர் மாநகராட்சி பகுதியில் தொழில் உரிமம் பெறாத கடைகள் உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள இரண்டு பிரியாணி கடைகளில் தொழில் உரிமம் உள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தொழில் உரிமம் பெறாத ஒரு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். அப்போது அங்கு வந்த கடை உரிமையாளர் அதிகாரிகளிடம் தனக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பிரியாணி அண்டாவை நான் ரோட்டில் கொட்டுகிறேன் என அண்டாவை தூக்க முயன்றார். ஆனால் அவர் ஒருவரால் தூக்க முடியவில்லை, அருகில் நின்றவர்களை உதவிக்கு அழைத்தும் யாரும் செல்லவில்லை, இதனையடுத்து அவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் உணவு வீணாகிவிடும் எனவே ஹோட்டலை திறந்து கொடுங்கள், தொழில் உரிமம் பெற கால அவகாசம் வேண்டும் என கூறினார்.

ஆனால் அதிகாரிகளோ தொழில் உரிமம் பெற்ற பின்னர் தான் கடையை திறப்போம் எனக் கூறி கடைக்கு ஓட்டு போட்டு சீல் வைத்து சென்றனர். இதேபோல அந்த பிரியாணி கடைக்கு அருகில் உள்ள மற்றொரு பிரியாணி கடை அதன் அருகில் உள்ள ஒரு பேக்கரி கடை என மேலும் இரண்டு கடைகளுக்கு அடுத்தடுத்து தொழில் உரிமம் இல்லாத காரணத்தினால் பூட்டி சீல் வைக்கப்பட்டது அதேபோல ஓசூர் பகுதியில் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வியாபாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story