மூதாட்டியிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் கைது
ஓசூர் ஓம் சாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சாரதா பாய் (70) இவர் தனது வீட்டில் கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு வாலிபர் ஒருவர் தினமும் பால் வாங்கி சென்றுள்ளார். இன்று வழக்கம் போல அவரது வீட்டுக்கு காலையில் பால் வாங்குவதற்காக சென்ற அந்த வாலிபர் மூதாட்டியின் வீட்டில் இருந்த வலி மருந்து ஒன்றின் படத்தை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்வதாக கூறியுள்ளார்.
அதனைக்கேட்ட மூதாட்டியும் அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார் அப்போது மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க செயினை வாலிபர் பறித்து கொண்டு சாலையில் தயாராக இருசக்கர வாகனத்தில் நின்ற தனது நண்பரோடு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவம் குறித்து மூதாட்டி சாரதா பாய் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோக்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் ஓசூர் முக்கால் சென்ட் பகுதியை சேர்ந்த யஸ்வந்த் (21) மற்றும் ஓசூர் பழைய ஏஎஸ்டிசி அட்கோ பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (24) ஆகிய இருவரும் சேர்ந்து மூதாட்டியிடம் தங்க செயினை பறித்து சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் போலீசார் வாலிபர்கள் இருவரும் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.