தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் மோசடி செய்தவர் கைது
கைதானவர்
செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரியில் சதீஷ்குமார், 47, என்பவர், 'ஸ்ரீஹிதா ஆட்டோ ஜோன்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு, ராயல் என்பீல்டு புல்லட் விற்பனை மற்றும் பராமரிப்பு நடக்கிறது.
இந்த நிறுவனத்தில், ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தமிழரசன், 35, என்பவர், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், இருசக்கர வாகனங்களை வாங்கவும், பராமரிப்பு மற்றும் பழுது நீக்கவும் வரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று, அதை தன் சொந்த வங்கி கணக்கில் செலுத்தி, 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
நிறுவன கணக்குகளை சரிபார்த்தபோது, கடந்த சில மாதங்களாக, வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணம் மற்றும் வாகன முன்பதிவுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் நிறுவன வங்கிக் கணக்கிற்கு வராதது சதீஷ்குமாருக்கு தெரிந்தது. இது குறித்து, அவர் தமிழரசனிடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், சதீஷ்குமார் புகார் அளித்தார்.
அதன்படி, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவான தமிழரசனை தேடி வந்தனர். இந்நிலையில், தமிழரசனின் மொபைல் போன் சிக்னலை கண்காணித்த போது, அவர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பதுங்கியிருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், தமிழரசனை கைது செய்து, அவரிடம் இருந்த, 95,000 ரூபாயை பறிமுதல் செய்து, அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.