மார்த்தாண்டம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி மீது தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் , மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு, கோட்டவிளை பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ராமனாங்குழி சேர்ந்தவர் விஜயன் மகன் விஜின் (23) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
விஜின் தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். மாணவியின் தந்தைக்கும் விஜினுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் மாலையில் மாணவி கோட்டவிளை என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஜின் மாணவியை வழிமறித்து தகராறு செய்து, மேலும் மாணவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.
இதில் பாதிப்படைந்த மாணவி உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விஜின் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.