நாகர்கோவிலில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது 

நாகர்கோவிலில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது 
பைல் படம்
கோட்டாறில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிரிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வாலிபர் மற்றும் அவரது தாய், தந்தையின் வங்கி கணக்கை முடக்கம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு போலீசார் நேற்று பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிள் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசை கண்டதும் அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி ஓடிவிட்டார். போலீஸார் துரிதமாக செயல்பட்டு மோட்டார் சைக்கிளுடன் மடக்கி அவரை பிடித்து, சோதனை செய்தபோது அதில் ஒரு பொட்டலத்தில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த ரகுராஜ் (28) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்ததுடன், கஞ்சா, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அவரது வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. பின்னர் ரகுராஜ் அவரது தந்தை, தாய் ஆகிய மூன்று பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாகுல், ஜஸ்டின் செல்வம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story