புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

ஒரத்தநாடு அருகே,புதிதாக அமைத்து தர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில், உள்ள ஆதிதிராவிடர் தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கட்டுமானம் பழுதடைந்த காரணத்தால், கடந்த 2012 - 13 ஆம் ஆண்டில், ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் கடந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கும் தூண்கள் பழுதடைந்துள்ளது. தொட்டியில் மேல் கட்டுமானங்கள் சேதமடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இங்கு வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இதனை கவனத்தில் கொண்டு, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி விட்டு, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினர் வ.அரவிந்தன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை. ஏசுராஜா முன்னிலையில், ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரியிடம் வியாழக்கிழமை காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது, கிளைச் செயலாளர் ப.ஹரிஹரன், ஒன்றியக் குழு உறுப்பினர் செ.பிரேம்குமார், கிளைப் பொருளாளர் செ.ராமகிருஷ்ணன், மற்றும் உறுப்பினர்கள் சௌ.பரணி, சீ.அன்பு, தேவா, கு.பூவரசன், சு.சிவா ஆகியோர் உடனிருந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags

Next Story