பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் மரணம்!

பைல் படம்
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள செம்பூர் கீழத் தெருவை சேர்ந்த கோட்டாளம் மகன் முகேஷ் (22). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு ஆட்டோ டிரைவராக கோவையில் பணி செய்து வருகிறார். தனது ஊரிலுள்ள கோவிலில் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு சமீபத்தில் வந்துள்ளார்.
கடந்த 9ம் தேதி தங்களது வயலில் அறுவடை செய்த நெல்லை குடோனில் சேமித்து வைப்பதற்காக தனது நண்பர் செம்பூர் அருகில் உள்ள தவசி நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் நிதிஷ்குமார் (24) என்பவருடன் பைக்கில் சென்று விட்டு ஊர்திரும்பிக் கொண்டிருந்தார். கொமந்தான் நகரை அடுத்தாற்போல் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி வேன் மீது பைக் நேருக்கு நேர் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை முகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து முகேஷ் தாயார் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல் நிலைய ஏட்டு வேல்பாண்டி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
