கோவில் விழா ; ஹாரன் சத்தத்தில் மிரண்ட யானை - வாலிபர் காயம்
கோவில் விழாவிற்கு அழைத்து வரப்பட்ட யானை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் சுவாமி நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 5-ம் திருநாளான நேற்று மதியம் நவ திருப்பதி பெருமாள்களும் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக திருக்குறுங்குடி மடத்தில் இருந்து திருப்புளியங்குடி பெருமாளை வரவேற்க 3 யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் வாகன ஓட்டிகள் ஹாரன் சத்தம் வேகமாக எழுப்பினர்.
சத்தத்தை கேட்டதும் சிறிய யானை ஒன்று மிரண்டு ஓடியது. இதனை கண்ட மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சீர் பாதம் தூக்கியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து வந்த மணிகண்டன் (38) என்பவர் யானையின் அருகே நின்று கொண்டிருந்தார். யானை மிரண்டதை கண்டதும் ஓடிச் சென்று ஒரு மோட்டார் சைக்கிளின் அருகே அமர்ந்து ஒளிந்து கொண்டார்.
ஆனாலும் அந்த யானை அவரை விரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் மீது தனது தலையை வைத்து முட்டியது. இதில் காயமடைந்த மணிகண்டன் உடனடியாக ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக அந்த யானை, பாகனால் கட்டுப்படுத்தப்பட்டு ஆழ்வார் தோப்பில் உள்ள யானை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.