இளைஞர் வெட்டி கொலை; போலீசார் விசாரணை
கோவை அருகே பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
கோவை:ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்.இவரது மகன் பிரணவ்(18) ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரணவ் இன்று மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தம் முன்பாக தனது தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரணவை சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதிகளில் பலத்த படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பிரணவை வெட்டிய அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனைப் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரணவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே பிரணவை வெட்டி விட்டு தப்பி ஓடிய அந்த இளைஞர் சூலூர் காவல் நிலையம் சென்று அங்கு சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை சூலூர் காவல் துறையினர் சிங்காநல்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துனர்.பின்னர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லே அவுட் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் காதல் விவகாரத்தில் பிரணவை வெட்டி கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பிரணவ் உடன் பேசி கொணிருந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.