பந்தல் அமைப்பாளர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை
செல்வராஜ்
பந்தல் அமைப்பாளர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை.
பந்தல் அமைப்பாளர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் கொடுக்கல் } வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பந்தல் அமைப்பாளரைக் கொலை செய்த இளைஞருக்கு கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகையன் மகன் ஐயப்பன் (32). பந்தல் அமைப்பாளர். இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் செந்தில் குடும்பத்துக்கும், கணேசன் மகன் செல்வராஜ் (34) குடும்பத்துக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக செந்திலுக்கு ஆதரவாக ஐயப்பன் இருந்தார். இதன் காரணமாக ஐயப்பனை செல்வராஜ் அடிக்கடி மிரட்டி வந்தார். இது குறித்து கணேசனிடம் ஐயப்பன் உள்ளிட்டோர் 2017, மார்ச் 15 ஆம் தேதி தங்களது மகன் செல்வராஜை கண்டித்து வைக்குமாறு கூறினர். அப்போது, அங்கு வந்த செல்வராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பனைக் குத்தினார். இதனால், பலத்த காயமடைந்த ஐயப்பன் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஐயப்பன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பாபநாசம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. ராதிகா விசாரித்து செல்வராஜூக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
Next Story