ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி வந்த இளைஞர் கைது

ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி வந்த இளைஞர் கைது

கைது

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வேனில் ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி, சட்ட விரோத கும்பல் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப் படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் முதல்நிலை காவலர்கள் செல்வராஜ், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று சாத்தான்குளம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது படுக்கப்பத்து காமராஜர் சிலை பகுதியில் சந்தேகப்படும்படி வந்த ஆம்னி வேனில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் வேனில் 50 கிலோ வீதம் 10 மூடைகளில் ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக வேன் ஓட்டுநர் படுக்கப்பத்து மறக்குடியை சேர்ந்த முருகன் மகன் முத்துராஜா (21) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், ராமகிருஷ்ணாநகர், படுக்கப்பத்து, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் பொது விநியோகத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசியை, பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி உடன்குடி அனல் மின்நிலைய கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய ஆம்னி வேனில் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு அதிகாரிகள், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் முத்துராஜாவை கைது செய்ததுடன் 500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story