ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது
வசந்தகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வியாழக்கிழமை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் மேம்பாலம் அருகில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் விற்பனைக்காக 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதேபோன்று ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட மங்கம்மா குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியின் போது குளத்தின் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீசார் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் இவரிடமும் 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் ஊராட்சி, அன்னை நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் விஷ்ணு (20), பழைய ஜோலார்பேட்டை, பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் வசந்தகுமார் (23) என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் மல்லானூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கஞ்சா பிரியர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சா வீதம் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.