சவுக்கு சங்கருக்கு ஜூன்- 5 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சவுக்கு சங்கர் வழக்கு
பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிமன்ற தரப்பில் காவல் விசாரணையின்போது காவல்துறையினர் துன்புறுத்தல் எதுவும், இருந்ததா? வழக்கறிஞர்களை சந்தித்தீர்களா? என நீதிமன்ற தரப்பில் கேள்வி எழுப்பியபோது காவல்துறை தரப்பில் துன்புறுத்தல் இல்லை எனவும், வழக்கறிஞர்களை சந்தித்தேன் எனவும் பதிலளித்தார். தொடர்ந்து காவல் விசாரணை குறித்து கேள்விக்கு தான் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜூன் -5ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்பு கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்துசெல்வதற்காக நீதிமன்றத்தில் மேல்தளத்தில் இருந்து அழைத்துவந்தபோது தரைத்தள பகுதியில் நின்றுகொண்டிருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கலைச்செல்வன் என்பவர் சவுக்கு சங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் ஒழிக என கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சவுக்கு சங்கரும் , பெலிக்ஸ்சும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாகவும் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுக்கு சங்கரை தூக்கில் போட வேண்டுமெனவும் முழக்கம் எழுப்பியபடி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினார்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதனிடையே காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துசென்றனர். இதனிடையே சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது நாளை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது