பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் யுகாதி பண்டிகை சிறப்பு வழிபாடு
சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு தினசரி வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இன்று யுகாதி ( தெலுங்கு வருடப் பிறப்பு) பண்டிகையை முன்னிட்டு அங்காளம்மனுக்கு காலையில் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பிறகு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பிறகு அம்மனுக்கு வேப்பம் பூ துவையல், பருப்பு வடை பிரசாதம் திருக்கோயில் நிர்வாகத்தால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்காள அம்மனை வழிபட்டு சென்றனர்.
இக்கோயில் ராஜகோபுரம் மற்றும் திருப்பணிகள் ரூ. 1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் கோயில் மண்டபம், பக்தா்கள் தங்குமிடம், சுற்றுச்சுவா், உணவுக்கூடம் மற்றும் இதர திருப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.திருக்கோயில் திருப்பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் மாநில வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளதால்,
பக்தர்கள் உற்சாகத்துடன் வழிபாட்டில் கலந்து கொண்டதாக திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் S. முருகபாண்டியன் மற்றும் S.சத்தீஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விஷேச பூஜைகள், அபிஷேகம், அன்னதானம் நடைபெறுகின்றது.