பாஜகவுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியா தாங்காது.! திமுக எம்பிக்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்
பாஜகவுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும், அரசியல் சட்டமும் தாங்காது என்று திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த தீர்மானத்தில், "தேர்தல் வாக்குறுதிகளை" நிறைவேற்றுவதற்குப் பதில் விளம்பரத்தில் மோகம்; வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் "15 லட்சம் ரூபாய் போடுவதற்கு பதில்" ஒவ்வொரு குடும்பத்திலும் விதவிதமான வரி வசூல்; "மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிப் பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது; "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப் பதில்' இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியது;
"ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குவதற்கு பதில்" ஒட்டுமொத்த இளைஞர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தில் கொண்டு வந்து விட்டது; ஏழைகளுக்கு கடனளிக்க எந்த திட்டமும் இல்லை நம் இந்திய நிதி அமைச்சரிடம்; ஆனால், பா.ஜ.க.வால் கார்பரேட் முதலாளிகளின் கண்ணசைவில் இயங்கும் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடிகள் - வரிச் சலுகைகள் வழங்குவது; எல்.ஐ.சி முதல் ஏர்இண்டியா வரையிலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்பதில் ஆர்வம் காட்டுவது; கேஸ் சிலிண்டர் தொடங்கி மூக்குபொடி வரை ஜி.எஸ்.டி. போடுவது; மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிற போது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது;
"அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை போற்றிப் பாதுகாப்பதற்குப் பதில்", அதை தகர்த்தெறியும் பணியை அன்றாட நடவடிக்கையாக மேற்கொண்டு வருவது; "அரசியல் சட்ட அமைப்புகளின் தன்னாட்சியை கட்டிக் காப்பதற்கு பதில்" அமலாக்கத்துறை, சிபிஐ, ஒன்றிய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருவது;
‘உழவர்களின் தோழன்’ என்று கூறிக்கொண்டே அவர்கள் வாழ்க்கையை - வாழ்வாதாரத்தை குழி தோண்டி புதைக்கும் உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது - எதிர்த்து போராடிய உழவர்களை அலட்சியம் செய்ததும், பின் அனைத்துத் தரப்பு எதிர்ப்பினை கண்டு பயந்து பின்வாங்கியது. ஏழைகளுக்கு கடனளிக்க எந்த திட்டமும் இல்லை நம் இந்திய நிதி அமைச்சரிடம்; ஆனால், பாஜகவால் கார்பரேட் முதலாளிகளின் கண்ணசைவில் இயங்கும் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடிகள் - வரிச் சலுகைகள் வழங்குவது;
“நடுநிலையான ஆளுநர்களை நியமிக்க வேண்டும்” என்ற சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைக்குப் பதில், அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது; “மாநிலத்தின் நிர்வாகச் சுதந்திரத்தை” நிலைநாட்டுவதற்குப் பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே திருத்தும் வகையில் டெல்லியில் அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது; “மண்ணைத் தொட்டு வணங்கிய நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பதற்கு பதில்” நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் யாரையும் மாற்றுக் கருத்து பேச விடாமல் - பிரதான எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல் -நாடாளுமன்ற மாண்பை சிதைத்துள்ளது; அதானி குழுமத்தின் ‘மெகா முறைகேடு’ பற்றிய இண்டென்பர்க் அறிக்கை குறித்த விவாதத்தை, நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மறுப்பது;
அன்னைத் தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்து சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மடியில் வைத்து சீராட்டிக் கொண்டிருப்பது தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிக்கத் திட்டம் போட்டு பணியாற்றுவது; தமிழ்மீது காதல் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி நம் இளைஞர்களை தமிழில் போட்டித் தேர்வுகளைகூட எழுத விடாமல் தடுத்தது; இன்றைக்கு நாட்டில் வெறுப்புவாத அரசியல் பற்றி எரிகிறது. மணிப்பூர் கலவரத் தீ இன்னும் அடங்கவில்லை. தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
இந்தியாவின் புகழை உலக நாடுகள் மத்தியில் கொண்டு சென்ற சமூக நீதி சமத்துவம் - மதச்சார்பின்மை ஜனநாயகம் எல்லாம் இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் தலை கவிழ்ந்து கிடக்கின்றன. நாட்டின் அரசியல் சட்டம் - அந்த அரசியல் சட்டத்தை நிலைநாட்டும் நீதித்துறை எல்லாம் ஒன்றிய அரசின் வரம்புமீறிய அதிகாரத்திற்கும் • மிரட்டலுக்கும் உள்ளாக நேரிடுகின்றன. இப்படியொரு சூழலில்தான், 'அனைவருக்கும் நான் பிரதமர்' என்ற பிரதமர் அவர்களே, பொது சிவில் சட்டம் என்ற "வெறுப்பு முழக்கத்தை " முன்வைத்துள்ளார். எம்.எல்.ஏ.- எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்தின் கதாநாயகனாக பா.ஜ.க. என்ற கட்சியை மாற்றி பிரதமராக இருந்த திரு.ராஜீவ் காந்தி, திரு.வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் வலுப்படுத்திய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை "காட்சிப் பொருளாக்கி" வேடிக்கை பார்க்கிற பா.ஜ.க.வுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும் தாங்காது இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது.
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள “Socialistic Secular Democratic Republic” (சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு) என்ற சொல்லையேகூட நீக்கிவிடும் பேராபத்தில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை பதிவு செய்யும் இக்கூட்டம் - வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழகத்தை - தமிழக மக்களை ஒன்பது ஆண்டுகாலம் புறக்கணித்து ஏமாற்றியதை, அவசர அவசரமாக கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை, ஆளுநர்களின் அத்துமீறல்களை, பாஜக ஆட்சியில் ஜனநாயகத்திற்கு - மதச்சார்பின்மைக்கு - சமூக நீதிக்கு - அடிப்படை உரிமைகளுக்கு - மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழக மக்களுக்காகவும் - இந்தியாவுக்காகவும் செயல்படுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.