பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் விருதை வழங்கினார்

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் விமானநிலையத்தில் அவரை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரான்ஸ் ராணுவ இசைக்குழுவினர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஓட்டல் முன்பாக ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டு, ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.கடந்த காலத்தில், கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களால் பெறப்பட்டது. இவர்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், புட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் உள்ளிட்டோர் அடங்குவர்.

Tags

Next Story