மாநில அளவிலான இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு முகாமில் நூறுசதவீத தேர்ச்சி
இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு
சாரண சாரணீயர் இயக்கத்தில் மேதகு தமிழக ஆளுநரால் வழங்கப்படும் மாநில அளவிலான இராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வில் 2019 முதல் 2022 வரை பங்கேற்ற சாரண சாரண சாரணீயர், திரிசாரணர், திரிசாரணீயர்களுக்கான தேர்வு முடிவுகள் மாநிலத் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களில் இருந்து முறையே 2019 ஆம் ஆண்டில் 454 சாரணர்களும், 378 சாரணீயர்களும், 2020 ஆம் ஆண்டில் 567 சாரணர்களும், 435 சாரணீயர்களும், 2021 ஆம் ஆண்டில் 143 சாரணர்களும், 112 சாரணீயர்களும், 2022 ஆம் ஆண்டில் 381 சாரணர்களும்,249 சாரணீயர்களும் தேர்ச்சி பெற்று விருது பெற தகுதி பெற்றுள்ளனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கான திரிசாரணர் பிரிவில் 76 பேரும், திரிசாரணீயர் பிரிவில் 77 பேரும் திருச்செங்கோடு மாவட்டத்திலிருந்து தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் வாரியான தேர்வு முடிவுகளை நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் முதன்மை ஆணையருமான ப.மகேஸ்வரி வெளியிட மாவட்டச் செயலர்கள் து.விஜய், சி.ரகோத்தமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் விருதுகளைப்பெற்று சாதனைகள் புரிந்துள்ள சாரண, சாரணீயர்கள், திரிசாரணர், திரிசாரணீயர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய சாரண ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் திருச்செங்கோடு முதன்மை ஆணையர் இரவிச்சந்திரன், மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் நாமக்கல் சாரண ஆணையர் அ.பாலசுப்ரமணியம், மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் திருச்செங்கோடு சாரண ஆணையர் கணேசன், மாவட்டத் தலைவர் வித்யாவிகாஸ் எஸ்.குணசேகரன், மாவட்ட ஆணையர்கள் முனைவர் டி.ஒ.சிங்காரவேல், முனைவர் வெ.தில்லைக்குமார், முனைவர் சித்ராமோகன், முனைவர் கு.வெற்றிச்செல்வன், சாரதாமணி, க.சிதம்பரம், சண்முகசுந்தரம், கே.எஸ் பழனியப்பன், பி.வி.குமார் உள்ளிட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.