நாமக்கல் மாவட்டத்தில் காணாமல்போன 104 செல்போன்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் காணாமல்போன 104 செல்போன்கள் மீட்பு

செல்போன்கள் மீட்பு 

நாமக்கல் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.15.60 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் மீட்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் திருட்டுப் போன ரூ.15.60 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அவற்றை, அதன் உரிமையாளர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பொதுமக்களிடம் இருந்து மர்ம நபர்கள் செல்போன்களை திருடிச் சென்றனர். இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், செல்போன்கள் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையின் நடவடிக்கையால் திருட்டுப் போன 104 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் புதிய செல்போன்களை வாங்கும்போதும், பழைய செல்போன்களை வாங்கும்போதும் உரிய அசல் ரசீதுடன் வாங்க வேண்டும். செல்போன்களை அஜாக்கிரதையாக வாகனங்களிலோ அல்லது பைகளிலோ வைத்து விட்டு வெளியே செல்ல கூடாது.

செல்போன்கள் காணாமல் போனால் CEIR PORTAL மூலம் புகார் பதிவு செய்யலாம். மேலும், ஆன்லைன் மோசடி உள்பட, சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் மோசடிகளை 1930 என்ற கட்டணமில்லா போன் எண் மூலமும், www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்யலாம். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

Tags

Next Story