வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 3 % வட்டி மானியம்
மாவட்ட ஆட்சியர் ச.உமா
உழவர் சந்தையிலிருந்து உலக சந்தையிலான வேளாண் தொழில்களின் தடையில்லா வளர்ச்சிக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தொலைநோக்குடன் கூடிய நீண்ட கால திட்டங்களை செம்மையுடன் செயல்படுத்தி வருகின்றது. இந்நோக்கத்தின் அடிப்படையில் வேளாண்மை உட்கட்டமைப்புகளை பலப்படுத்துவதுடன் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைத்து பல்வேறு விநியோகத் தொடர் சங்கிலியினை பலப்படுத்தி பயன் காணும் வகையில் வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடனுடன் கூடிய மானியத்திட்டங்களுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதி மூலம் அதிகபட்சமாக 3 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்பட உள்ளது.
திட்டத்தின் நோக்கங்களாக, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற செய்திடல்,
அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைத்தல், விவசாயிகளின் சந்தைக்கான அனுகுதலை எளிதாக்குதல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகள்.
தமிழகத்தில் இத்திட்டமானது 2020-2021 முதல் 2032-2033 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளில் ரூ.5,990 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு தகுதி வாய்ந்த நிறுவனம் ஒரு இடத்தில் அல்லது பல்வேறு இடங்களில் திட்டங்களை செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் சேர்த்து மொத்தம்
ரூ.2 கோடி வரை கடன் பெற தகுதியானவை. துவக்க நிறுவனம் மற்றும் விவசாயி, வேளாண் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக 25 திட்டங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். விவசாயிகள் தங்களின் வேளாண் விளை பொருட்கள் சந்தையினை அடையும் வகையில் உள்ள பல்வேறு விநியோக தொடர் மேலாண்மை திட்டங்கள் அனைத்தும் இதன் மூலம் பயன்பெற தகுதி உள்ளவை.
தகுதியான திட்டங்கள் :
அறுவடைக்குப்பின் மேலாண்மை திட்டங்கள்
இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர்பு சேவைகள், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள், மின்னனு வணிக மையங்கள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன துல்லிய பண்ணையத்துக்கான உள்கட்டமைப்புகள், வேளாண் இயந்திர வாடகை மையம் மற்றும் உயர் தொழில்நுட்ப மையம், சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின்மோட்டார் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம்.
தகுதியான பயனாளிகள்
இந்த திட்டங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACS), சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள் (MCS), உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOp), சுய உதவிக் குழுக்கள் (SHGs), விவசாயிகள், கூட்டு பொறுப்புக் குழுக்கள் (JLGs)பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள்,வேளாண் தொழில் முனைவோர், மத்திய மாநில அரசு உதவி பெறும் பொது தனியார் கூட்டு திட்டங்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். மேலும், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுனங்களுக்கான திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று 35 சதவீதம் வரை பின்னேற்பு மானியம் பெற்ற தகுதியான நபர்கள் வட்டி மானியம்
3 சதவீதம் வரை பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்
இந்த திட்டம் குறித்து https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ddab.namakkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), நாமக்கல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.