வாழ்ந்து காட்டுவோம் மானிய திட்டம் குறித்த கருத்தரங்கு

வாழ்ந்து காட்டுவோம்  மானிய திட்டம் குறித்த கருத்தரங்கு

கருத்தரங்கு

நாமக்கல் நகராட்சி, அய்யம்பாளையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டம் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் 3 சேவை வங்கிகளுக்கு பரிசுகளையும், 9 பெண்கள் தொழில் முனைவோர் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும் ஒரு பயனாளிக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் இணை மானிய நிதி விடுவிப்பதற்கான ஆணையையும் வழங்கினார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இணை மானியத் திட்டமானது நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களை உள்ளடக்கிய 87 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் தாங்கள் துவங்கும் அல்லது விரிவுபடுத்தக்கூடிய தொழிலுக்கான கடனை 30 சதவிகித மானியத்துடன் பெற முடியும். 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள், மகளிர் குழு குடும்ப உறுப்பினர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் இக்கடன் பெற ஏதுவான பயனாளிகள் ஆவர்.

தற்போது இதுவரை இந்த இணை மானிய திட்டத்தில் 13 வங்கிகள் இணைந்து, இக்கடனை தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் வழங்கி வருகிறார்கள். கடன் பெறக்கூடிய தொழில் முனைவோர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பெறவேண்டிய அரசின் சான்றிதழ்கள் அனைத்தும் இத்திட்ட பயனாளிகளுக்கு மதி சிறகுகள் மையத்தின் மூலம் குறைந்த செலவில் பெற்று தரப்படுகிறது. இத்துடன் வங்கியாளர்கள் கேட்கும் தொழில் திட்டம், கடன் ஆய்வு போன்றவை திட்டப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 109 பயனாளிகள் இணை மானியத் திட்டத்தின் மூலம் கடன் பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த பயனாளிகள் அனைவருக்கும் ரூ.1,35,00,000 (ஒரு கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) மானியமாக மாநில அலுவலகத்தில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தினை நான்கு வட்டாரங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வங்கிக் கடன் பெறுவதற்கு. தொழில் துவங்க ஏதுவாக அரசின் அத்தியாவசிய சான்றிதழ்கள் பெறுவதற்கும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மதி சிறகுகள் மையத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். கடன் பெறுவது மட்டுமில்லாமல் கடனை திரும்ப செலுத்துவதிலும் உரிய ஆர்வம் காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார். இக்கருத்தரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, துறைசார்ந்த அலுவலர்கள், வங்கியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story