ஜேடர்பாளையம் அருகே போலீஸ் பாதுகாப்பை மீறி டிராக்டருக்கு தீ வைப்பு

ஜேடர்பாளையம் அருகே போலீஸ் பாதுகாப்பை மீறி டிராக்டருக்கு தீ வைப்பு
X

டிராக்டருக்கு தீ வைப்பு

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே, போலீஸ் பாதுகாப்பை மீறி, விவசாய தோட்டத்தில் நிறுத்தி இருந்த, டிராக்டருக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே காரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி திருமணமான இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். எனினும் இதை ஏற்க மறுத்த கிராம மக்கள் அங்குள்ள வெல்ல தயாரிப்பு ஆலைகளில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இரு பிரிவினரிடையே கடந்த 6 மாதங்களாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

தவிர, வெல்ல தயாரிப்பு ஆலைகள், ஆலை உரிமையாளர்களின் வீடுகள், பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. மேலும் அடிக்கடி, விவசாய தோட்டத்தில் உள்ள பாக்கு, வாழை மரங்களும் வெட்டி சாய்க்கும் சம்பவங்களும் நடைபெற்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இச்சூழலில் நேற்று முன்தினம் அதிகாலை ஜேடர்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவரின் விவசாய தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு, மர்மநபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்ரமணியம் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதில் டிராக்டர் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடாகியது.

இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். எனினும், தீ வைத்தது யார் என்பதை கண்டறிய முடியவில்லை. சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story