தலைமை ஆசிரியர் காலி பணியிடம் கலந்தாய்வு மூலம் நியமனம்
ஆசிரியர் சங்கம் பாராட்டு
தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியிடங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன. மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தர வரிசை அடிப்படையில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு எமிஸ் வெப்சைட் வழியாக ஆன்லைனில் நடைபெற்றது. கலந்தாய்வில் 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்காக 819 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 7: 2 என்ற விகிதாச்சாரப்படி, 182 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 637 மூத்த முதுகலை ஆசிரியர்களை கொண்ட முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் 697 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தங்களுக்கு விருப்பமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்தனர். 122 பேர் தங்களுக்கான மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.
இன்னும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13, திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 , விழுப்புரம் மாவட்டத்தில் 6, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5, நீலகிரி மாவட்டத்தில் 5, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3, வேலூர் மாவட்டத்தில் 1 என 45 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றையும் விரைந்து நிரப்ப பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ளதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள 600 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, துணை பொதுமாறுதல் கலந்தாய்வையும் எமிஸ் இணையதளம் வழியாக நடத்த பள்ளி கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும், மூன்று நாட்களாக நடைபெற்ற, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, மிகவும் வெளிப்படை தன்மையுடனும், எந்த ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடமும் மறைக்கப்படாமலும், நேர்மையாகவும் நடந்தது. இதற்காக தமிழக முதல்வருக்கும், பள்ளி கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.