10 எம்.பி சீட் கேட்கும் திமுகவின் பத்து தல

10 எம்.பி சீட் கேட்கும் திமுகவின் பத்து தல

தி.மு.க 

நாடும் நமது, நாற்பதும் நமது’ என்று முழங்கி இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னுடைய போர்ப்படை தளபதிகளாகிய உங்களை நம்பி, நாடாளுமன்ற தேர்தலை ஒப்படைத்திருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க கூறினார். மேலும், , நமது கூட்டணியான இந்தியா வெல்லும்; அதை 2024 தேர்தல் சொல்லும் என்று திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சூளுரைத்தார். அதுமட்டுமல்ல

வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையானவற்றை கண்டறிந்து, அதனை நிறைவேற்றிக் கொடுங்கள். கட்சியின் உயர்மட்ட மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என்று அதே கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுகவால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் தங்களது பணிகளையும், முக்கிய கோரிக்கைகளையும் மாவட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தனித்தனியாக ஆலோசனை நடத்தவும் முடிவு செய்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கியிருக்கிற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், தங்களது தொகுதிகளில் எம்.பி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை அறிவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்று இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் புதுமுகங்களுக்கு 50 சதவீதம் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தங்களது வாரிசுகளுக்கு சீட் வாங்க வேண்டும் என்று திமுகவில் உள்ள முக்கிய பத்து தல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் பற்றிய விவரங்களை காண்போம்.

நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தமது மகன் அருண் நேருவுக்கு பெரம்பலூர் தொகுதியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தமது மகன் எ.வ.வே. கம்பனுக்கு திருவண்ணாமலை தொகுதியை கேட்டு வருவதாக பேசப்படுகிறது.

பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தமது மகன் திலிப் கண்ணப்பனுக்கு சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமது மகன் கதிரவனுக்கு கடலூர் தொகுதியை கேட்டு வருவதாக பேசப்படுகிறது.

திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தமது மகன் கதிர் ஆனந்துக்கு மீண்டும் வேலூரில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமது மகனும் பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாருக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் அப்பாவு தமது மகன் அலெக்சுக்கு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாக பேசப்படுகிறது.

முன்னாள் திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தமது மகன் கலாநிதிக்கு மீண்டும் வட சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கட்சி தலைமையிடமும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரும் சேலத்து சிங்கமென்று அழைக்கப்படும் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி டாக்டர் மலர்விழிக்கு சேலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி வீரபாண்டியார் குடும்பத்தினர் கேட்டு வருவதாக தெரிகிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமது மகன் காதம் சிகாமணிக்கு மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கட்சி தலைமையிடமும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. திமுகவின் முக்கிய தலைகள் 10 எம்.பி தொகுதிகளுக்கு குறிவைத்திருப்பதால், எஞ்சிய தொகுதிகள் புதியவர்களுக்கு கிடைக்கும் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags

Next Story