எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எருமப்பட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசினார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றிய பா.ஜ.க. சார்பில், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் செந்தில்பாரதி, மேற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில துணைத் தலைவரும், மாவட்ட பார்வையாளருமான வி.பி.துரைசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பாரத பிரதமரின் ஜல்ஜீவன் குடிநீர் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை, லாரிகளில் அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் வெட்டி எடுத்துச் செல்லப் படுகின்றன, நாமக்கல் நகராட்சி கழிவுநீர் தூசூர் ஏரியில் கலப்பதால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது மற்றும் மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தாமல், மத்திய அரசின் திட்டங்களை புறக்கணித்து வரும் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பா.ஜ.க பொது செயலாளர்கள் ரவி, முத்துக்குமார், சேதுராமன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், மத்திய அரசு நலத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், பட்டியல் அணி பொது செயலாளர் கந்தசாமி, சிறுபான்மை அணி தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட திரளான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.