மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎம் கட்சி 3 இடங்களில் மறியல்
சிபிஎம் கட்சி மறியல்
நாமக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 154 பேர் கைது.
இந்தியாவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, தமிழ்மணி, கண்ணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் - மோகனூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர். மொத்தம் 54 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் மற்றும் பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதில் மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.