சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஈஸ்வரன் எம். எல். ஏ கோரிக்கை.

ஈஸ்வரன் எம். எல். ஏ கோரிக்கை.
தமிழ்நாட்டில் சுங்கசாவடிகள் மிகவும் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை முற்றிலும் அகற்றிட வேண்டும் என போராடிவரும் நேரத்தில், மேலும் விவசாயம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 28 சுங்கசாவடிகளின் சுங்க கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய சாலை பாரமரிப்பு இல்லாத நிலையிலும், சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்த கால அவகாசம் முடிந்த நிலையிலும் பல இடங்களில் வருமானம் மட்டுமே இலக்காக கொண்டு சுங்க கட்டண வசூல் வேட்டையில் ஈடுபடுவது முன்பே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பெருங்குடி மக்களையும், தொழில்துறையும், போக்குவரத்து தொழில் செய்பவர்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் பாதிக்கும். இதற்கு பின்னர் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் அபாயமும் உள்ளது. அரசு போக்குவரத்து கழகமும் தன் சுமையை குறைக்க பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு இடத்தில் சாலை பராமரிப்பு பணிகளும், சாலை விரிவாக்க பணிகளும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமலும் அடிக்கடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வரும் இந்த வேளையில் மத்திய அரசு வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு சுங்க கட்டண வேட்டை நடத்துவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒப்பந்த காலம் முடிந்தும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் சுங்கசாவடிகளில் முற்றிலும் சுங்க வசூலை நிறுத்திடவும், சுங்க சாவடிகளில் வசூல் செய்யப்படும் மொத்த சுங்க வசூல் பற்றிய வெளிப்படை தன்மை இல்லாமல் ஆண்டுக்கு ஆண்டு தொழிற்துறையினர் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபவர்களிடம் கலந்தாலோசிக்காமல், அவர்கள் பிரச்சனைகளை கேட்டறியாமல் பின்னாளில் ஏற்பட இருக்கும் விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திக்காமல், அறிவிக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசும் அதன்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் உடனே திரும்பப பெற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
