இராசிபுரம் வட்டாரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
ஆட்சியர் ச.உமா ஆய்வு
இராசிபுரம் நகராட்சி, நாமக்கல் நகராட்சி, மலையாம்பட்டி ஊராட்சி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதையொட்டி, இராசிபுரம் நகராட்சி, பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில், சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை, நீர் சுத்திகரிப்பு மையம், சமையல் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கற்றல் திறன் குறித்து கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது, மாணவ, மாணவியர்களை பாடங்களை வாசிக்க சொல்லி சிறப்பாக கற்றல் திறன் வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இராசிபுரம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு, மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்து கையாளும் முறைகள், குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், நெகிழி உள்ளிட்ட மக்கா குப்பைகளை மறுசுழற்ச்சிக்கு அனுப்பும் முறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், நாமகிரிப்பேட்டை வேளாண் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், மலையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் கணித வாய்ப்பாடு வாசிக்க சொல்லி கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் மலையாம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி வார்டு எண் 14 தேவேந்திரபுரம் நடுத்தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகாலுடன் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் வடக்கு மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர்கள் செல்வி சுபாஷினி (இராசிபுரம்), சென்னுகிருஷ்ணன் (நாமக்கல்), இராசிபுரம் வட்டாட்சியர் சுரேஷ், இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், மேகலா, வேளாண்மை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.