எல்லா பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
எல்லா பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படும் என கூறப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கக்கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல் ஒருங்கிணைந்த வடக்கு, தெற்கு, மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
நாமக்கல் நகர செயலாளர் தனபால் வரவேற்றார். விலைவாசி உயர்வை கண்டித்தும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க கோரியும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் மாலதிவினோத் கலந்து கொண்டு பேசினார். இதில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், சக்திவேல், பாலச்சந்தர், தனலட்சுமி, ராஜேந்திரன், செல்வி, அரசுவிஜயன், ராமு, பரத், சுந்தர்ஆனந்த், இளையராஜா, குணசேகரன், நாராயணசாமி, வெள்ளியங்கிரி, கணேஷ், செல்வம், தமிழ்செல்வன், முருகானந்தம், மணி, வினோத் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.