நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு

முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டை விலை ரூ. 4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 15 ஆம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ. 4.75 ஆனது. நேற்று 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.85 ஆனது. இந்த நிலையில் நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story