மின் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் - ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற மின் கட்டண மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியது. மின் கட்டண நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தவில்லை என்று சொன்னால் பல தொழிற்சாலைகள் இயங்க வழியின்றி மூடப்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். தமிழகத்தில் பொருளாதாரம் தாழ்ந்து போகும். இன்றைய தொழில் சூழ்நிலையில் பீக் ஹவர் மின்சார கட்டணத்தையும், நிலை கட்டணத்தையும் செலுத்தி தொழில் நிறுவனங்களை இயக்குவது மிகவும் சிரமம். உலக அளவிலும், இந்தியாவிலும் வியாபார சூழ்நிலை முன்னேற்றம் அடையும் வரை சென்ற ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இன்றைக்கு அமைச்சர் தலைமையில் தொழில் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்ற முன்னெடுப்பை வரவேற்கின்றேன். இன்றைய கூட்டத்தில் மின்கட்டண மறு சீரமைப்பை உறுதி செய்து, தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றினால் மகிழ்ச்சி அடைவேன் என எம்.எல்.ஏ ஈஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
