கண்களை பாதிக்கும் எல்இடி விளக்குகள் : தடை செய்ய வலியுறுத்தல்

கண்களை பாதிக்கும் எல்இடி விளக்குகள் : தடை செய்ய வலியுறுத்தல்

சுற்றுலா பேருந்துகளில் கண்களை பாதிக்கும் சுழலும் எல்இடி விளக்குகள் 

இராசிபுரம்:தனியார் சுற்றுலா பேருந்துகளில் கண்களை பாதிக்கும் சுழலும் எல்இடி விளக்குகளை தடை செய்ய வலியுறுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சுற்றுலா செல்லும் பேருந்துகளில் கண்களை பாதிக்கும் வகையில் சுழலும் எல்இடி விளக்குகள், நெருப்பு பறக்கும் வகையிலான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை தடை செய்ய வேண்டும் என வாகனப் போக்குவரத்து அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் பலரும் நேரில் சென்று மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராசிபுரம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதல் முதலாக இந்த பேருந்துகளில் கண்ணை பறிக்கும் வகையில், அதிக வோல்ட் கொண்ட லேசர் சுழலும் விளக்குகள், எல்இடி விளக்கும் பேருந்தின் வெளிப்பகுதிகளிலும், பேருந்தின் உள் பகுதியிலும் பல லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்தின் மேல் பகுதியில் 5 அடி உயரத்துக்கும் நெருப்பு பறக்கும் வகையில் விளக்குகள் பல வண்ணங்களில் பொருத்தியுள்ளனர்.

சுற்றுலா செல்லும் பயணிகள், சுற்றுலா தளங்களில் நடனமாடி மகிழ்வுடன் கொண்டாடுவதற்காக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர் போன்றவற்றால் ஒளி, ஒலி அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

பேருந்துகளில் பயன்படுத்தும் லேசர் விளக்குகள், நுரையீரலை பாதிக்கும் கார்பன் புகைகளால் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் கண்கள், சுவாச உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் பேருந்து இயக்கும் விதிமுறைகளில் இது போன்ற விளக்குகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசின் வாகனப் போக்குவரத்துத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இது போன்ற பேருந்துகளை தடை செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து கோரிக்கை மனுவும் தமிழக முதல்வர், போக்குவரத்துத்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் இயங்கும் சுற்றுலா பேருந்துகளில் லேசர் லைட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல் பல லட்ச ரூபாய் செலவில் லேஷர் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளதால் பாதிப்புகள் ஏற்படும் எனவும் ராசிபுரம் பகுதியில் உள்ள வாகனங்கள் மட்டும் தடை செய்யப்படாமல் தமிழக முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைத்து டூரிஸ்ட் வாகனங்களையும் கண்காணித்து லேசர் லைட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ராசிபுரத்தில் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் எஸ்.எம்.ஆர் பரந்தாமன், அவர்கள் இது குறித்து பல இடங்களில் மனு அளித்தார் என செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார். மேலும் உடனடியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பஸ் மற்றும் பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Next Story