வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி   மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

ஆட்சியர் ச.உமா

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 3,359 பணிக் காலியிடங்கள் கொண்ட TNUSRB – PC இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 18.08.2023 அன்று முதல் 17.09.2023 அன்று வரை இணையவழி (www.tnusrb.tn.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற TNUSRB – PC இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), போட்டித் தேர்வில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடைபெற்ற இலவச எழுத்து மற்றும் உடற்தகுதி பயிற்சி வகுப்பில் பயின்று 2021 ஆம் ஆண்டில் 24 நபர்களும் 2022 ஆம் ஆண்டில் 17 நபர்களும் பணி ஆணை பெற்று தற்பொழுது பணியில் உள்ளனர்.

TNUSRB – PC எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு 30.08.2023 முதல் மதியம் 2.30 முதல் 5,00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story