லஞ்சம் பெற்ற அரசு உதவி பொறியாளர்... கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை... காஞ்சியில் பரபரப்பு!!
காஞ்சிபுரத்தில் லஞ்சம் பெற்றதாக கூறி அரசு உதவி பொறியாளர் உட்பட இருவர் கைது காஞ்சிபுரத்தில் லஞ்சம் பெற்றதாக கூறி அரசு உதவி பொறியாளர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வாகன பழுதுநீக்கும் மையம் நடத்தி வருகிறார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான பழுதுநீக்கும் தானியங்கி பணிமனைக்கு, உதிரி பாகங்களை விநியோகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வெங்கடேசன் கடையின் உரிமத்தை புதுப்பிக்க, பணிமனை அலுவலக உதவி பொறியாளர் மோகனிடம் விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து, பொறியாளர் மோகன், அவரது கடையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உரிமத்தை புதுப்பிப்பதாக கூறியுள்ளார். லஞ்சம் தர விரும்பாத வெங்கடேசன், இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். பின்னர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரம் பணத்துடன், சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள அரசு வாகன தானியங்கி பணிமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு உதவி பொறியாளர் மோகன் அறிவுறுத்தலின் பேரில் பணிமனை பொறுப்பாளர் முரளியிடம் லஞ்ச பணம் ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அப்போது,அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் முரளியை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் உதவி பொறியாளர் மோகனை கைதுசெய்த போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.