ராசிபுரத்தில் கைத்தறி கண்காட்சி, மருத்துவ முகாம்
கைத்தறி கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தொடங்கி வைத்தார். மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10.00 லட்சம் மதிப்பில் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடனுதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது:
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், கடந்த 2015 வருடம் முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், 9-வது தேசிய கைத்தறி தினத்தினை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் சார்பாக இராசிபுரத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நெசவாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வண்ணம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்துடன் இணைந்து நடத்தும் அமைப்பு சாரா நெசவாளர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் சிறப்பு முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நெசவாளர்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினர்களாக விண்ணப்பிக்க மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசின் சார்பாக செயல்படுத்தி வருகின்றது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து, சிறப்பாக நெசவு தொழில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
சிறப்பு கைத்தறி கண்காட்சியில் திருச்செங்கோடு சரகத்திற்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற முன்னனி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட இரகங்களான கைத்தறி துண்டுகள், வேட்டிகள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம், பட்டு சேலைகள் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட வடிவமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைத்தறி சேலைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகை கைத்தறி துணிகளுக்கும் 20% அரசு தள்ளுபடி வழங்கி விற்பனை செய்யப்படுகின்றன.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இராசிபுரம் நகராட்சி, வேலாப்பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் கைத்தறி பழனிகுமார், உதவி ஆணையர் (தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயலட்சுமி, கைத்தறி துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.