வீட்டுமனை ஒதுக்கவில்லை :ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த பெண்கள்

வீட்டுமனை ஒதுக்கவில்லை :ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த பெண்கள்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

வீட்டுமனை ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து ஜேடர்பாளையம் சரளைமேடு கிராம மக்கள், தங்களது ஆதார் கார்டுடன் திமுக உறுப்பினர் கார்டையும் ஒப்படைக்க வந்ததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்புஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் ஏராளமான பொதுமக்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனர். தனியார் ஒருவர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட நாட்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இதையொட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அப்போது வீடிழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஓராண்டுக்கு மேல் ஆகியும் மாற்று இடத்தில் வீட்டு மனை வழங்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து மனு அளிப்பதற்காகவும், ஆதார் கார்டுகளை ஓப்படைப்பதாகவும் நாõமக்கல் மாவட்ட ஆட்சியர் அலவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து சரளைமேடு கிராம மக்கள் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கு முன் நீதிமன்ற உத்திரவின் பேரில், பரமத்தி வேலூர் ஜேடர்பாளையம், சரளைமேடு காமராஜர் நகரில் 98 வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக ஓலப்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவும் 36 நபர்களுக்கு மட்டும் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எங்களது ஊராட்சியிலேயே வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு போதிய இடம் உள்ளது. எனினும், இப்பகுதியில் இதுவரை வீட்டுமனை ஒதுக்கப்படவில்லை. எங்களது கோரிக்கை ஏற்கப்படாததால் எங்களது ஆதார் கார்டை திருப்பி ஒப்படைக்க வந்துள்ளோம். பெரும்பாலானவர்கள் திமுக உறுப்பினர்கள் என்பதால் திமுக உறுப்பினர் அந்த கார்டையும் ஒப்படைக்கிறோம் என்றனர். இச்சம்பவத்தால் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story