ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி பயிற்சி
புத்தூர் கிழக்கு கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் வட்டாரம், புத்தூர் கிழக்கு கிராமத்தில் கால்நடை மருந்தக வளாகத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்தார். மானாவரி பயிர் சாகுபடியுடன் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். மற்றும் இயற்கை உரம் இடுவதின் அவசியம், உழவு தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். மானாவரியில் முக்கிய அங்கமான கால்நடை வளர்ப்பின் அவசியம், பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பின் பங்கு குறித்து புத்தூர் கிழக்கு கால்நடை உதவி மருத்துவர் லோகநாதன் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.
ஒருங்கிணைந்த பண்ணை முறை மூலம் பயிர்கள் மற்றும் தீவனப் பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, ஆடு அல்லது செம்மறி ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மண்புழு உரம் உற்பத்தி மற்றும் பல செடிகள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுவது பற்றி துணை வேளாண்மை அலுவலர் ராமசாமி விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் செய்திருந்தார்.