நகைக்கடை ஊழியர் கடத்தல் - ரூ.50 ஆயிரம் பறிப்பு

நகைக்கடை ஊழியர் கடத்தல்  -  ரூ.50 ஆயிரம் பறிப்பு

50 ஆயிரம் பறிப்பு

சேலம் குகையை சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரசேகர் (வயது 33). இவர், பிரபல நகை கடை ஒன்றில் அடகு வைக்கும் நகைகள் மூழ்கி போகும் பட்சத்தில் அதனை வாங்கி விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு ரவுடி கும்பல் கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியது. பின்னர் அவர்களிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்த நிலையில் மீண்டும் ரூ.1½ லட்சத்தை வீட்டிற்கு சென்று எடுத்து வருமாறு அந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் வற்புறுத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு, வீட்டிற்கு சென்று நகையை எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை தருவதாக கூறினார். இதனை உண்மை என்று நம்பிய ரவுடி கும்பல் சந்துருவை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பணத்திற்காக தயாராக இருந்தனர். அப்போது, வீட்டுக்கு சென்ற அவர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கிருந்த ரவுடி கும்பலை சேர்ந்த விமல், மாரியப்பன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்படி, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி இளையராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் (28) மற்றும் அவரது தம்பி மாதவன், குப்பைமேடு கோபி (23) ஆகிய 3 பேரும் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சிறையில் இருந்து வெளியே வந்தநிலையில், கையில் பணம் இல்லாததால் சந்துருவை கடத்தி சென்று பணம் பறித்தோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மேலும், கூட்டாளிகளான கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடிகள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் கூறியது உண்மையா? அந்த ரவுடிகள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? ரவுடி கும்பல் சென்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story