ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், வருகிற நவம்பர் 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில், ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும், தினசரி ஏராளமான பக்தர்கள் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோயில் மத்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில், சுவாமிக்கு மேற்கூரை இல்லை. முன் மண்டபமும் இல்லாமல் இருந்தது. கடந்த 1995ம் ஆண்டு முதன்முறையாக முன் மண்டபம் அமைக்கப்பட்டு, கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆகம முறைப்படி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், விநாயகர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, வருகிற நவம்பர் 1-ம் தேதி கோயில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வாக, முகூர்த்தக்கால் நடும் வைபவம் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுரை நரசிம்மர் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் பட்டாச்சாரியார்கள் மூலம் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர், குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திருக்கோயில் உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், நகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.