கொலைக் குற்றவாளி அகோரி வேடத்தில் கைது

கொலைக் குற்றவாளி அகோரி வேடத்தில் கைது

நாமக்கல், ஈரோடு, சேலம் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி போலி சாமியாரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று மாலை 04:00 மணியளவில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு அகோரி உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது முன்னுக்கு பின் முரணாக கூறினர். இதனை அடுத்து போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர். விசாரனையில், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட கொலைகளை செய்த, சேலத்தைச் சேர்ந்த ரவுடி முஸ்தபா என்பது தெரிய வந்தது. குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்த போது, தன்னை கொலை வழக்குகளில் தொடர்ந்து போலீசார் தேடி வந்ததையடுத்து, தான் காசிக்குச் சென்று முஸ்தபா என்கிற முகாமது ஜிகாத் என்கிற தனது பெயரை ஜிக்லினத் அகோரி என மாற்றிக்கொண்டு சாமியாராக தலை மறைவு வாழ்க்கையாக ஊர் ஊராக சுற்றித்திரிந்ததாகவும், திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் இரண்டு கொலை குற்றங்களிலும், ராசிபுரத்தில் நடைபெற்ற இரண்டு கொலை வழக்குகளிலும், பரமத்தியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கிலும் மற்றும் சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இவரை கைது செய்யும்போது எஸ்.ஐ.க்கள் இளமுருகன், தங்கவடிவேல், போலீசார் திருமலைவாசன், சின்னதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story