நான் முதல்வன் - ”உயர்வுக்கு படி” - “Coffee With Collector” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு
Coffee With Collector
நான் முதல்வன் - ”உயர்வுக்கு படி” முகாமில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கலந்து கொண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் “Coffee With Collector” என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டுமென்கின்ற நோக்கில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன் – ”உயர்வுக்குபடி” என்ற முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தனர்..
மேற்படி நடைபெற்ற நான் முதல்வன் - ”உயர்வுக்கு படி” முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களில் சந்தோஷ் குமார், கௌசல்யா, கிருஷ்ணவேனி, சத்யா, யுவராணி என 5 மாணாக்கர்கள் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், சுகன்யா, முத்துமாரி, செல்வி, அஞ்சலி, ரோஷினி, ஜோதி ஆகிய 6 மாணவிகள் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் என மொத்தம் 11 மாணாக்கர்கள் உயர்கல்வி பயில கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். தங்களது உயர்கல்வியினை சிறப்பாக பயின்று சமூகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையை சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும். மேலும் உயர்கல்வியோடு தங்களது தனித் திறமையினையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். மாணவ செல்வங்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் வட்டம், முள்ளுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த தொழிற்கல்வி பயின்று வரும் செல்வி தீபிகாவுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக ரூ.50,000/- க்கான காசோலையினையும், போதமலை கீழுர் மலை கிராமத்திலிருந்து மருத்துவ படிப்பு பயின்று மருத்துவரான ரமணி என்பவரை பாராட்டி, புத்தகங்களையும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தலைமலை வனப்பகுதியில் விதை பந்து வீசிய மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி, புத்தகங்களையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2,250/- வீதம் 5 மாணவர்களுக்கும், 1 மாணவனுக்கு ரூ.1,750/- என மொத்தம் ரூ.13,000/- மதிப்பிலான கல்வி உதவித் தொகையினை
6 மாணாக்கர்களுக்கும் வழங்கி, தமிழ்நாடு வழிகாட்டி கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொணடனர்.