இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க விவசாயிகள் முன்வர வேண்டும்
நாமக்கல், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அவர்கள் வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும்
முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவசாயத்தை
தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மேலும் வளர்ந்து வரும் மக்கள் தெகைக்கு
தேவையான உணவு மற்றும் உணவு பொருட்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட
இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில்
பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மிக முக்கிய அங்கமாக விளங்குகிறது.
வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும்
நீரும் நச்சுத்தன்மை அடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இருப்பதால் இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவைப் பயன்படுத்தி
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக
வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால்
தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதனைத்
தொடர்ந்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புற
இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு
ஏற்படுத்துதல் மற்றும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க மாவட்ட மற்றும் வட்டார
அளவில் விவசாயிகளுடன் கூடிய குழுக்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக பாரம்பரிய
வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இத்திட்டத்தின் கீழ்
நாமக்கல் மாவட்டத்திற்கு 15 வட்டாரங்களில் 400 எக்டர் பரப்பளவில் 20 தொகுப்புகள்
உருவாக்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது.
விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக சான்று
கட்டணமான எக்டருக்கு ரூபாய் 2000/- வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 1
எக்டருக்கு குறைவாக உள்ள விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். மேலும்
இத்திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் உணவு பொருள்கள் மனித உடலுக்கு ஊறு
விளைவிக்காத காரணத்தினால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பையும் அதிக
இலாபத்தையும் ஈட்டித் தரும் திட்டமாகும். எனவே இத்திட்டம் குறித்த விபரங்களை
தெரிந்து கொள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர்
அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.