நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி
ஆட்சியர் ச.உமா தொடங்கி வைத்தார்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி துவக்க விழா நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா போட்டிகளை துவக்கி வைத்து பேசும்போது, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இப்பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவியர்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது தனித்துவத்தையும், திறமையையும் அறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து படித்து நமது வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அனைத்து மாணவ, மாணவியர்கள் படிக்கும் காலத்தில் ஒற்றுமையாக இருப்பதை போன்று சமூதாயத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்திற்காக பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, மாணவ, மாணவியர்களின் கல்வி சிறப்பாக தொடர வேண்டுமென்று உயர்வுக்குப் படி போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் தரத்தினை உயர்த்துவதற்கு தொழிற்கல்வி நிலையங்களின் தரத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் உயர்த்தியுள்ளார்கள். மேலும் அரசு பள்ளி மாணவியர்கள் உயர்கல்வி நன்றாக பயிலுவதற்காக ”புதுமைப்பெண் திட்டம்” மூலம் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த துறையினை தேர்வு செய்யவதற்கு ”நான் முதல்வன் திட்டம்” என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற்று நமது சமூதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா பேசினார்.
பின்னர், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில் “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்ற நல்லிணக்க நாள் உறுதிமொழியினை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ந.முருகேசன், மாநில சிறுபான்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட சிறுபான்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் பி,ஏ.சித்திக், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு, பேரசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.