தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ஆணை
வீடு கட்ட ஆணை
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் கிராமம், ஆலம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில் தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு அமைப்பதற்கு உத்தரவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கொண்டு தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு அமைப்பதற்கு உத்தரவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தீ விபத்தினால் வீடுகள் முழுவதும் சேதமடைந்த 4 குடும்பத்தினருக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான உத்தரவுகளையும், வீட்டின் முன்புறம் உள்ள கீற்றுக் கொட்டகை சேதம் அடைந்த குடும்பத்தினருக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தலா ரூ.25,000/-, பாதிக்கப்பட்ட
6 குடும்பங்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், தீ விபத்தினால் சேதமடைந்த பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவைகளையும் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும், கடந்த 08.08.2023 அன்று சூறாவளி காற்றினால் செங்கல் சூளை புகைப்போக்கி விழுந்து கோபால் என்பவர் உயிரிழந்தமைக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4.00 லட்சம் நிவாரண உதவித்தொகையினை வழங்கினார்.
பின்னர் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது: குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் கிராமம் ஆலம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 11.08.2023 அன்று இரவு சுமார் 9.45 மணியளவில் எதிர்பாரத விதமாக தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லாத காரணத்தால் பெரிய ஆபத்து ஏற்படவில்லை. இன்றையதினம் சேதமடைந்த இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, குக்கர், குடம், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்டுவதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.3.00 லட்சம் வழங்கியுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.4.50 லட்சம் வழங்கியுள்ளார்கள். மேலும், வீடு கட்டும் வரை பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு தங்குமிடம், உணவு பொருட்கள், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். கடந்த 08.8.2023 அன்று சூறாவளி காற்றினால் செங்கல் சூளை புகைப்போக்கி விழுந்து கோபால் என்பவர் உயிரிழந்ததற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4.00 லட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்கள். அதன்படி ரூ.4.00 லட்சம் உயிரிழந்த கோபால் அவர்களின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் ப.கௌசல்யா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் சண்முகப்பிரியா, குமாரபாளையம் வட்டாட்சியர் சண்முகவேல், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் கார்த்திக் ராஜா, ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா, பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், திமுக மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி மற்றும் ஆலம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.