அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட விலையுயர்ந்த பாறைகள்
பாறைகள் கடத்தல்
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் லாரியில் தார்பாய் போட்டு மறைத்து கடத்திச் செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புள்ளான சிலை செய்ய பயன்படும விலையுயர்ந்த பாறைகள் கடத்திய டாரஸ் லாரியை பிடித்து பறிமுதல் செய்த வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் ஹேமாவதி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக டாரஸ் லாரியில் பாறைகள் வெட்டி கடத்தி செல்லப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் ஹேமாவதி தலைமையில் காவல்துறையின் தொடர் நோன்பு பணிகளில் ஈடுபட்டு வாகன சோதனை செய்தனர்.
அப்போது அத்தனூர் அருகே உள்ள சித்தர் கோயில் என்னும் இடத்தில் வந்த டாரஸ் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி செல்வது போல் தார்பாய் போட்டு மறைத்து பாறைகள் கடத்திச் செல்லப்படுவது வாகன சோதனையில் தெரியவந்தது.
உடனடியாக காவல் ஆய்வாளர் சோதனை மேற்கொண்டு டாரஸ் லாரியை கற்களுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
முதல் கட்ட விசாரணையில் ராசிபுரம் தேங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கார்த்தி (27) மற்றும் ஆயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா (42) உள்ளிட்டோர் TN 34 W 5655 டாரஸ் லாரியில் மல்லூர் பகுதியில் இருந்து பாறைகளை அனுமதியின்றி வெட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாமக்கல் மாவட்ட கனிமவளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் எவ்வளவு பாறைகள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது இதன் மதிப்பு எவ்வளவு என்பது முழு விசாரணைக்கு பின்பே தெரிய வரும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.