பிரதமரின் விவசாய நிதி உதவியை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பது கட்டாயம்

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித் தொகையை தொடர்ந்து பெற, வங்கி கணக்குடன் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 4,831 விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே இவ்விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கேஒய்சி சரிபார்ப்பு பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.

மேலும் 4,744 விவசாயிகள் தங்களது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் 14 வது தவணை தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 14 வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்திடவேண்டும். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு துவங்க வேண்டும்.

மேலும் அஞ்சல் அலுவலங்களில் வங்கி கணக்கு துவங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story