திருநங்கைகள் சார்பில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா

திருநங்கைகள் சார்பில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா
X

குமாரபாளையம் திருநங்கைகள் சார்பில் நடந்த சமயபுரம் மாரியம்மன் திருவிழாவில் திருநங்கைகள் அம்மன் வேடமணிந்தவாறு தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா துவங்கியது.

குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் திருநங்கைகள் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நேற்றுமுன்தினம் மாலை கணபதி ஹோமம், கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. 15வது ஆண்டாக நேற்று மாலை காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. வண்ண மலர்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். ஒருங்கிணைப்பாளர் மாதம்மாள் தலைமை வகித்தார். இதில் அக்னி சட்டி ஏந்தியவாறும், காளியம்மன், மாரியம்மன், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட பல அம்மன் வேடங்கள் போட்டவாறு திருநங்கைகள் பங்கேற்றனர். பல்வேறு ஊர்களிலிருந்து திருநங்கைகள் பெருமளவில் இவ்விழாவில் பங்கேற்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடியவாறு கலைஞர்கள் பங்கேற்றனர். இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், கூழ் ஊற்றுதல், மஞ்சள் நீர் திருவீதி உலா, இரவு சிறப்பு ஆராதனை, தெருக்கூத்து ஆகியவை நடைபெறவுள்ளன.

Next Story