முட்டை ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் தகவல்
சங்கத் தலைவர் தகவல்
கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில், பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க செயலாளர் சுந்தரராஜ், ஏற்றுமதியாளர் சங்க துணைத்தலைவர் வில்சன், மண்டல குழு உறுப்பினர்கள் நாகராஜ், வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முட்டை விற்பனையில் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்காக, கடந்த மே மாதம் முதல், மைனஸ் இல்லாத முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது. இந்த விலையை பண்ணையாளர்கள் அனைவரும் முறையாக கடைபிடித்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும், மைனஸ் விலைக்கு விற்பனை செய்துவிடக்கூடாது என்பதை, பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்திய அளவில் நாமக்கல்லில் இருந்து அதிகளவில் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, துபாய், இலங்கை, ஓமன், கத்தார் ஆகிய வெளிநாடுகளுக்கு, தினசரி சுமார் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுதி செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து, மேலும், பல நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்காக, மத்திய, மாநில அரசுகளை அணுகி, ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் முட்டை ஏற்றுமதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். இதனால் முட்டைக்கு விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும்.
தீவன மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முட்டையின் உற்பத்தி செலவைக் கணக்கிட்டால், ஒரு முட்டை ரூ.5.50 க்கும் மேல் விற்பனை செய்தால் மட்டுமே கட்டுபடியாகும். தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்துள்ளது. இதன் காரனமாக பண்ணைகளில் சுமார் 15 சதவீதம் வரை தற்போது முட்டை உற்பத்தி குறைந்துள்ளது என்றார். முட்டை கொள்முதல் விலை உயர்ந்தால்தான், பண்ணையை தொடர்ந்து நடத்த முடியும் என்று அவர் கூறினார்.